திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்களின் நிலை கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகள் இயக்கம் குறித்து தற்பொழுது தமிழக விரைவு போக்குவரத்து கழக இயக்குனர் கு.இளங்கோவன் அவர்கள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு வசதியாக அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள்ளாக பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும், அரசு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரையும் திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரையும் மட்டுமே இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.