கடந்த 7 ஆண்டுகளாக நியாயமான அவர்களின் முறையீடுகள் எதுவும் கண்டுகொள்ளப்படாததன் விளைவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களின் ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் அதாவது மறுவரையறை செய்யப்படும். ஆனால் அவர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தோடு முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையிலும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
பல முறை நடந்த பேச்சுவார்த்தைகளில் கடைசியாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்ட 2.57 சதவீத ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது. 2.44 சதவீதம்தான் வழங்க முடியும் என்றது அரசு. வேறு வழியில்லாமல் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர் தொழிலாளர்கள். ஆனால் இது மட்டுமே பிரச்சனை இல்லை. போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் தொழிலாளர் வைப்புநிதி, சிக்கன நாணயச்சங்கம், இன்சூரன்ஸ், பணிக்கொடை என்றெல்லாம் பிடிக்கப்படும் தொகைகள் அந்தந்த இடங்களுக்குச் செலுத்தப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகவே இருந்துவந்துள்ளது. அந்த வகையில் 7,000 கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகங்கள் ஊழியர்களுக்குத் தரவேண்டியுள்ளது.
இதில் 1,700 கோடி ரூபாய் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கானது. 64,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். மாதம்தோறும் அவர்களுக்கு 74 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதையும் முறையாக வழங்குவதில்லை. இப்படி எதற்குமே தீர்வு கிடைக்காமல் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில்தான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர். 95 சதவீத பேருந்துகள் ஓடாமல் மக்கள் அல்லல் படுவதைப் பார்த்த பின்னும் போக்குவரத்துத் தொழிலாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை அரசு. மாறாக அது சென்னை உயர் நீதிமன்றத்திற்குத்தான் போனது. நீதிமன்றமோ போராட்டத்துக்கு தடை விதித்து; ஊழியர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும், பணிக்குத் திரும்பாதவர்கள் மீது பணிநீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.
ஆனால் தொழிலாளர்களோ இதனை ஏற்க மறுத்ததுடன், சட்டப்படி அதனை எதிர்கொள்வோம் என்றனர். உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் உடனடியாக அதை ஏற்போமே தவிர இந்த மிரட்டல் எல்லாம் எங்களைக் கட்டுப்படுத்தாது என போராட்டத்தைத் தொடர்கின்றனர் தொழிலாளர்கள்.
அரசோ, பயிற்சி இல்லாதவர்களையும் கட்சிக்காரர்களையும் கொண்டு பேருந்தை ஓட்ட முயற்சித்து, ஒரு 5 விழுக்காடு பேருந்துகளுக்கு மேல் ஓட்ட முடியவில்லை. போராட்டத்தையே சட்டவிரோதம் என நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கச் செய்து, நடவடிக்கை பாயும் என அரசு மிரட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்! தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்ளச் செய்து, அவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் இன்னலைத் தீர்க்க வேண்டும்’’ எனக்கூறியுள்ளார்.
source:
dinasuvadu.com