தமிழகத்தில் 6-வது நாளாக நீடிக்கும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

Default Image

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாதது, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், கடந்த வியாழக்கிழமையன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
வேலைநிறுத்தத்துக்கு தடை கோரிய பொதுநல வழக்கு ஒன்றில், தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று உத்தரவிட்டிருந்தது. நேற்று தொழிற்சங்கங்கள் சார்பில் வாதிடப்பட்டபோது, ஓய்வூதிய நிலுவை குறித்து முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், பொதுமக்கள் நலன் கருதி பணிக்கு திரும்புமாறு மீண்டும் உத்தரவிட்டதோடு, பணபலன்களை உடனடியாக வழங்க அரசுக்கு ஆணையிட்டது.
வேலைநிறுத்தத்தின் 6 -வது நாளான இன்று குடும்பத்துடன் போராட்டம் நடத்தப் போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் இரவு நேரத்திலும் பரபரப்பாக காட்சி தரும் கோயம்பேடு பேருந்து நிலையம், பேருந்துகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. பேருந்துகள் இயக்கப்படாததால், வெளியூர் செல்வதற்காக அங்கு வந்தவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே படுத்திருந்தனர். அதிகாலையில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.
மதுரை, கோவை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று 40 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் கூறினர்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்