நாளை முதல் பேருந்து இயக்கம்; புதிய வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.!
பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகளை அரசாணையில் தமிழக அரசு வெளியீடு.
மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 7 வது மண்டலமான காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, 8 வது மண்டலமான சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் போக்குவரத்து சேவை 50 % பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகளை அரசாணையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கும்போது செய்யவேண்டிய வழிமுறைகள் :
ஒவ்வொரு முறையும் பேருந்து பயணம் முடியும்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டும். பேருந்து பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும். பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை QRcode முறையை பயன்படுத்தலாம்.
ஓட்டுநர், நடத்துனரின் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும் :
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பணிக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும். பேருந்துகள் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. பயணிகள் பயன்படுத்தும் வகையில் பேருந்தின் படிக்கட்டு அருகே கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.
பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம் :
பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். பேருந்து முனையங்கள் ஒவ்வொரு நாளும் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.