கொரோனா தொற்று அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவை – மருத்துவ குழு பரிந்துரை!
கொரோனா தொற்று அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, கூடுதல்தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சுகாதாரத்துறை, அரசுத்துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கொரோனா பரவல் குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 30 மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும், கொரோனா பரவல் அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரவும், கொரோனா தொற்று குறைந்துள்ள பிற மாவட்டங்களில் மால்கள் மற்றும் பெரிய கடைகளை திறப்பதற்கும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.