புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் – தமிழக பகுதியில் ஏற, இறங்க தடை.!
புதுவையிலிருந்து இருந்து தமிழகத்தின் 2 மாவட்டங்களை கடந்து காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் சேவை தொடங்கியது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை புதுச்சேரி அரசாங்கம் அறிவித்தது. அதில், குறிப்பாக மதுக்கடைகள் மற்றும் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்கால் மாவட்டத்திற்கும் பேருந்துகளை இயக்க புதுவை அரசு முடிவெடுத்தது.
புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பணி நிமித்தமாக பலர் செல்கின்றனர். அவர்களுக்காக பேருந்து சேவையை தொடங்கியது புதுச்சேரி அரசு. ஒரு பேருந்திற்கு 32 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காரைகாலுக்கு செல்ல தமிழக மாவட்டங்களான கடலூர் மற்றும் நாகையை கடந்து செல்ல வேண்டும். அதனால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் அனுமதி பெறப்பட்டு பேருந்து சேவை தொடங்கியது. மேலும், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என இரு-மாவட்ட ஆட்சியர்களிடம் அனுமதி பெறப்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது.