தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் மாணவர்கள் பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர் .
மதுரை மெஜிரா கல்லூரியில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், நேற்றைய தினம் நடைபெற்ற மறியல் போராட்டத்தின் போது போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர்.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் சாலையின் இரு புறமும் அணிவகுத்து நின்றன. செட்டிக்குளம் பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து கட்டண உயர்வுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சையில் கரந்தை கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கல்லூரி நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியும் மறுத்துவிட்டனர். பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….