Bus Accident : கட்டுப்பாடின்றி ஓடிய அரசு பேருந்து.. வெளியில் குதித்த ஓட்டுநர் உயிரிழப்பு.! தப்பித்த பயணிகள்.!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சென்றுள்ளது. அப்போது அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் திடீரென்று பேருந்தில் இருந்து குதித்து பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டார். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த வித பெரிய காயங்களும் ஏற்படவில்லை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன் எனும் 43 வயது நபர், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பேருந்தை இயக்கி வந்துள்ளார். பேருந்தில் 30 பயணிகள் பயணித்து வந்துள்ளனர்.
அப்போது கொண்டமநாயக்கன்பட்டி எனும் ஊர் அருகே ஒரு பாலத்தை கடக்கும்போது பஸ் நிலை தடுமாறி உள்ளது. கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் திடீரென பேருந்தில் இருந்து வெளியே குதித்து விட்டார். இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
நல்வாய்ப்பாக பேருந்தானது அருகில் உள்ள முள்வேலி, மரம் ஆகிவற்றின் மீது மோதி நின்றது. அதன் காரணமாக பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்த வித பெரிய அடியும் ஏற்படவில்லை. இதனை அடுத்து நடத்துனர் வினோத்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.