தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் சிறப்பம்சம் என்ன?
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தமிழக மக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில்முனைவோருக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு தொழில் முனைவோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் தொழில் முனைவோர் கடனுதவி தொடர்பாக அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்,
அதேபோல ஜவுளி, லெதர், பிரின்டிங் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவும் விதமாக பல்வேறு அறிவிப்புகளையும் எதிர்ப்பார்க்கிறார்கள். தொழில் நகரமான கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு இந்த ஆண்டின் பட்ஜெட் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். மோட்டார், பஞ்சுநூல் போன்ற துறைகளில் அரசாங்கத்தின் மானியம் மற்றும் உதவிகள் அதிகம் தேவைப்படும் என்றும் தொழில்முனைவோர் கூறுகின்றனர்.
ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் நலிவடைந்த வணிகர்களுக்கு உதவும் விதமாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். தமிழக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் பட்ஜெட் அமையும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.