பட்ஜெட் தாக்கல் : அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர்…!

Default Image

முதல்வர் பழனிசாமி இந்த அறிக்கையில் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

கொரோனா நோய் தொற்று மற்றும் அதை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் உலக அளவில் மட்டுமின்றி, நமது நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பல சவால்களுக்கு இடையே 2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று சமர்ப்பித்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க பல முயற்சிகளும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கான பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

covid-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் வழங்க மத்திய அரசு 35 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.  நோயின் தாக்கத்தில் இருந்து நமது நாடும், மாநிலமும் மீண்டு வருவதற்கு இது உதவும். இத்தொற்றை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள மத்திய நிதி உதவியை மேலும் உயர்த்தி அளிக்க வேண்டும் எனவும் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் 3500 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கை அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். மதுரை – கொல்லம், சித்தூர் – தச்சூர் ஆகிய இரண்டு வழிதடங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை பணிகள் 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுவது தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும். இதனை வரவேற்கும் அதே நேரத்தில் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து ஒத்துழைப்பு நல்கும் என உறுதியளிக்கிறேன்.

சென்னை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், கடல்பாசி உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற சிறிய மீன்பிடி துறைமுகங்கள் மேம்பாட்டிற்கும் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் சிறப்பாக நடைபெற்று வருவதாக மத்திய நிதியமைச்சர் அவர்கள் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்கள். இப்பணிகளை விரைந்து முடிக்க தேவையான நிதியை அதாவது தமிழ்நாடு அரசு கோரியுள்ள 50 சதவிகித பங்கு நிதியை உடனடியாக அளிக்குமாறும், இன்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ லைட் மற்றும் மெட்ரோ நியோ திட்டங்களை கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் செயல்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஆத்ம நிருபர் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும், ஏற்கனவே மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான 3 நிதியுதவி தொகுப்புகளை வழங்கியது. இதில் தமிழ்நாடும் பெரும்பயன் அடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பருப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் மூன்று வருட கால கட்டத்தில் 7 புதிய ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இவற்றுள் இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டும் எனவும், தென் மாவட்டங்களில் ஒரு ஜவுளி பூங்காவும், சேலம் மாவட்டத்தில் மற்றொரு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான ஒரு புதிய நிதி நிறுவனம் ரூ.20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் பாராட்டுதலுக்குரியது ஆகும். இதன் மூலம் மூன்று வருடங்களில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் கடன் வசதி அளிப்பதற்கு உரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மாநிலங்களும் பெரும் பயன் அடையும்.

சர்வதேச நிதி நிறுவனம் கிப்ட் நகரத்தில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் நிதி நகரத் திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில், தமிழ்நாட்டிலும் ஒரு சர்வதேச நிதி நிறுவனத்தை ஏற்படுத்த மத்திய அரசு திட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இத்தருணத்தில் முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கையில் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ள நிலையில்,  தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கியுள்ள சலுகைகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்