தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை GST வரம்பிற்குள் கொண்டு வருக ! – ஈபிஎஸ்

Default Image

தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியின்படி, பெட்ரோலியப் பொருட்களை GST வரம்பிற்குள் கொண்டு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திமுக.

மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையிலும்; மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தினோம். ஆனால், தேர்தலின் போது வாய்க்கு வந்தவாறு அறிவித்த வாக்குறுதிகளில், தமிழக மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் அடியைக்கூட இந்த அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை.

விடியலைத் தருவோம் என்று சொல்லி முதலமைச்சரான திரு. ஸ்டாலின் அவர்கள், ஏற்கெனவே 2021-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மாவின் அரசு வழங்கிய பொங்கல் பரிசான 2,500/- ரூபாயைக்கூட வழங்காதது, ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த திமுக-வின் மக்களவைத் தலைவரும், கட்சியின் பொருளாளருமான திரு. டி.ஆர். பாலு அவர்கள் பெட்ரோல், டீசலை GST வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். அவ்வாறு பெட்ரோல், டீசலை GST வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம், குறைந்தது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை பெட்ரோலியப் பொருட்களின் விலை குறையும் என்றும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.

இதனால், தமிழகத்தில் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் குறைந்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறையும். அப்போது, திரு. டி.ஆர். பாலுவை பேட்டி கண்ட தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர், தமிழக நிதியமைச்சர் திரு. தியாகராஜன் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை GST வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறாரே என்று கேட்டதற்கு, தனி மனிதன் கருத்தை எல்லாம் பொருட்படுத்தக் கூடாது என்று திரு. டி.ஆர். பாலு பதில் அளித்துள்ளார்.

திரு. டி.ஆர். பாலுவை பேட்டி கண்ட நெறியாளர், திரு. தியாகராஜன் மாநில நிதியமைச்சர் ஆயிற்றே என்று கேட்டதற்கு, “நான் திமுக கட்சிப் பொருளாளர். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது, திமுக கட்சியின் தலைவர் (திரு. மு.க. ஸ்டாலின்) ஆணைப்படி தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசலை GST வரம்பில் கொண்டு வரப்படும் என்ற வாக்குதியை நான் தான் எழுதினேன்” என்று தெளிவாக பேட்டி அளிக்கிறார். திரு. ஸ்டாலின் அவர்களும் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோலியப் பொருட்களை GST வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று பலமுறை பேசியுள்ளார்.

மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களை GST வரம்பில் கொண்டுவர முடிவு செய்ததாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டினைக் கேட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும், மேற்கு வங்க அரசும் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும், ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வருகின்றன.

திமுக-வின் பொருளாளரும், மூத்த தலைவருமான திரு. டி.ஆர். பாலுவே, பெட்ரோல் மற்றும் டீசலை GST வரம்பில் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் திமுக அறிவித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது என்பதை இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்