#BREAKING: 30 ஆயிரம் பேரை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு ரத்து.!
தனியார் நிறுவனம் மூலம் மின்வாரியத்துக்கு 30 ஆயிரம் பேரை தேர்வு செய்யும் ஆணை ரத்து என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின்சார வாரிய பணியை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அரசாணை திரும்பப் பெறப்படும் என்றும் மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை எனவும் மின் துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். தமிழக மின்வாரியத்தை தனியார் மயமாக்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை. போராட்டம் நடத்திக்கொண்டிருக்காமல் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. கேங்மேன் பணியிடங்களுக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பணிநியமனம் செய்யப்படவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் நாளையே வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10 ஆயிரம் பேருக்கு பணி தரப்படும் என்று கூறியுள்ளார். 30 ஆயிரம் பேர் தனியார் மூலம் தேர்வு செய்யப்படுவதாக குற்றச்சாட்டி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் தங்கமணி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர், வயர்மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்றும் இதன் மூலமாக தனியாருக்கு 12,000 இடங்கள் செல்கிறது எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். 3 ஆண்டுகள் பணி வழங்கப்படும் என்றும் தகவல் கூறப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.