#BREAKING : மகளிர் காவலர் விடுதி -முதல்வர் நிதி ஒதுக்கீடு…!

Tamilnadu CM MK Stalin

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைக்க ரூ. 9.73 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் 1973-ஆம் ஆண்டில் மகளிர் காவல் பிரிவு நிறுவப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தச் சூழல் மிகவும் மாறி உள்ளது. சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளில் மகளிர் காவல் துறையினர் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.

மாநிலத்தில் தற்போது 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தாலுகா காவல் நிலையத்திலும் குறைந்தது ஒரு பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 பெண் தலைமை காவலர்கள் பணியில் உள்ளனர். தமிழ்நாடு காவல் துறையில் 2023-ஆம் ஆண்டு மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டை குறிக்கிறது.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி கட்டப்படும் என்றும், இவ்வசதி பெண் காவலர்கள் சென்னை மாநகருக்கு பணியிட மாறுதல் பெற்று வரும்போதெல்லாம், அவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைக்கும் வரை அல்லது சொந்தமாக வாடகைக்கு தங்கும் விடுதியை ஏற்பாடு செய்யும் வரை தங்கும் இடமாக பயன்படுத்தப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2023-2024ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் மகளிர் காவலர் விடுதி அமைத்திட 9 கோடியே 73 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு தற்போது நிருவாக ஒப்பளிப்பு செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம், சென்னை மாநகருக்கு பணியிட மாறுதலில் வரும் பெண் காவலர்களுக்கு இம்மகளிர் காவலர் விடுதி பேருதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்