#BREAKING: மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? – நீதிமன்றம்
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? என கேள்வி.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாக பின்பற்றவில்லை என தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் எனக் கூறிவிட்டு, அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா? என்பது குறித்தும் விளக்க வேண்டும் எனவும் இ.பி.எஸ். தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு கூறுகையில், கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்கு தான் உட்சபட்ச அதிகாரம் உள்ளது. ஜூலை 23 பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டிலும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை. செயற்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நியமனங்களுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட போதும் தேர்வு நடைமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால், பொருளாளர், தலைமை கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்கிறது. பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை என்றும் இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.