#Breaking:விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராக வட்டு எறிதல் வீராங்கனை ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரிக்கப்பட்ட நிலையில்,நிதியுதவி அளித்தார்கள் என்பதற்காக விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளாக அரசியல்வாதிகள்,தொழிலதிபர்கள் ஆகியோரை நியமிக்கக்கூடாது என்றும்,மாறாக விளையாட்டு சங்க நிர்வாகிகளாக விளையாட்டு வீரர்களையே நியமிக்க வேண்டும் .இது தொடர்பாக சட்டம் வகுக்கும் வரை நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தனிநீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்நிலையில்,இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில்,விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,வீரர்கள் மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர்,மேலும் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறிக்கவே விளையாட்டு சங்கங்களில் அரசியல் வாதிகள் நுழைகின்றனர்,அதே சமயம்,விளையாட்டு பயிற்சியாளர்களின் நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கூற முடியவில்லை எனக் கூறிய உயர்நீதிமன்றம்,தனி நீதிபதி உத்தரவில் என்ன தவறு உள்ளது? என தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்திடம் கேள்வி எழுப்பியது.
இதனையடுத்து,தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூறிய உயர்நீதிமன்றம், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.