#BREAKING : தீர்ப்பை விரும்புகிறீர்களா? பிரச்னையை விரும்புகிறீர்களா? – என்.எல்.சி-க்கு நீதிபதி கேள்வி
என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் என்.எல்.சி நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களிடையே நடைபெறும் பிரச்சனையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியத்தை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கனவே உள்ளது என்று என்எல்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதற்கு நீதிபதி, நீங்கள் தீர்வை விரும்புகிறீர்களா? பிரச்சினை விரும்புகிறீர்களா? என்று என்எல்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11-ல் தெரிவிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் எஸ்பிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யத் தவறினால் கடலூர் எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் தற்போது போராட்டம் நடைபெற்று வருவதாக என்று என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.