#BREAKING: விருதுநகர் பாலியல் வன்கொடுமை – 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!
விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்.
விருதுநகரில் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இதன்பின் இந்த வழக்கில் கைதான ஹரிஹரன், ஜூனைத், மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், போதை மாத்திரை, போதை ஊசிகளை சிபிசிஐடி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் கூறப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 நாள் விசாரணை முடிந்த நிலையில், இன்று 4 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரிடம் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் கைதான 8 பேரின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேருக்கு மட்டுமே இதில் தொடர்பு உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேருக்கும் வரும் 18ம் தேதி வரை நீதிமன்றக் காவல் என்றும் அன்றைய தினம் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.