#BREAKING : வேலூர் ஹிஜாப் விவகாரம்..! 7 பேர் கைது..!
வேலூரில் சுற்றுலா வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற சொன்ன விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் கோட்டையில் சுற்றிப்பார்க்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பிய விவகாரம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரசித்திபெற்றது வேலூர் கோட்டை ஆகும். இந்த கோட்டைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவது வழக்கம்.
அந்தவகையில், சமீபத்தில் வேலூர்க் கோட்டைக்கு ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய பெண்கள் சிலர் சுற்றுலா வந்துள்ளனர். அப்பொழுது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் அந்த பெண்களிடம் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் ஹிஜாபை கழற்ற வற்புறுத்தி உள்ளனர். பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்பத்தியது.
இந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சிலரிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறையினர், தற்பொழுது 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தனி நபர் சுதந்திரத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்புவது சட்டப்படி குற்றம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.