#Breaking:கொரோனா தடுப்பு விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் உறுதி!
சென்னை:கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.குறிப்பாக,கொரோனா பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது,கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை ஜன.21 ஆம் தேதி விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில்,இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையுடன் தேர்தல் நடத்த கடந்த ஆண்டு டிசம்பரில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது என்றும்,முன்னதாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து,தேர்தலை ஒத்திவைக்க கோரி நக்கீரன் அல்லாமல் பிற தரப்பினரும் மனுதாக்கல் செய்துள்ளதால்,வருகின்ற திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.