#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பேரணிக்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் 11ம் தேதி வரை பேரணிக்கு தடை விதிக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாத யாத்திரை, சைக்கிள் பேரணி, வாகன பேரணிகளுக்கும் வரும் 11-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள் அரங்குகளில் கூட்டம் நடத்தும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.