#Breaking:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி? – அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை!
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான மாநில தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியனது.
மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணை நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி,அரும்பாக்கத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில்,திமுக,அதிமுக,பாஜக, காங்கிரஸ்,தேமுதிக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முன்னதாக 11.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில்,தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,400 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறதாக கூறப்படுகிறது.மேலும்,ஆலோசனை கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா?,அல்லது இரண்டு கட்டங்களாக பிரித்து நடத்துவதா? என்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கேட்டறியவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.