#BREAKING: தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அமைச்சராக பதிவியேற்றார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் எம்.எல்.ஏ-வும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்என் ரவி. அமைச்சராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மலர்க்கொத்து வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதன் மூலம் தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக இருப்பார் என ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அமைச்சராக பொறுப்பேற்ற பின் பேசிய உதயநிதி ஸ்டாலின், பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சரிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.