#BREAKING: ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் தேதி அறிவிப்பு.!
ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வீடுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி ஆகியவை கடந்த 3 மாதங்களாக தமிழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது.
இதையடுத்து, ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வரும் 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வீடுகளில் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கனில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதையடுத்து சம்பந்தப்பட்ட அட்டைதாரர் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளில் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.