#BREAKING : இன்றைய நாள், இந்தியாவிற்கு பெருமை தரும் நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும் என முதல்வர் பேச்சு.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில், இன்றைய நாள் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக அமைந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடைபெற்று வருகிறது.
குஜராத் முதல்வராக இருந்தபோது 20 ஆயிரம் பேர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் பிரதமர் மோடி. செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரடியாக சென்று அழைக்கலாம் என்று இருந்தேன், ஆனால் கொரோனா தொற்று காரணமாக என்னால் நேரில் சென்று அழைக்க இயலவில்லை.
பிரதமர் அவர்கள் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்ற போது என்னை நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது எனது நிலை குறித்து எடுத்துக் கூறி அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் உடனடியாக நீங்கள் நன்கு ஓய்வெடுங்கள். நான் நிச்சயமாக விழாவில் கலந்து கொள்வேன் என தெரிவித்தார்.
வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்; தமிழ்நாடு அரசு நான்கே மாதத்தில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. 4 மாதத்தில் இந்த சர்வதேச போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது; துணை நின்ற அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும்.
கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது; இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட்மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா; இந்தியாவில் உள்ள 75 கிராண்ட்மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார்.