#Breaking:”இந்த ரெய்டு பழிவாங்கும் நோக்கில் திமுக அரசால் நடத்தப்பட்டுள்ளது” -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது குறித்து எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில்,இந்த ரெய்டு பழிவாங்கும் நோக்கில் திமுக அரசால் நடத்தப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுதொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாது:”திமுக அரசு ஒரு பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனவே,நீதிமன்றம் என்று ஒன்று இருக்கிறது.நிச்சயமாக நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபிப்போம்.
பொதுவாக அரசு ஒரு நடவடிக்கையை எடுக்கும்போது,அந்த நடவடிக்கையில் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க சில அமைப்புகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு அந்த வகையில் இந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனாலேயே,நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை,புகார் வந்தது என்று சாக்குபோக்கை அரசு கூறுகிறது.இது முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கில் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் திமுக அரசு இந்த நடவடிக்கையை நடத்தியுள்ளது.
ஆனால்,எந்தவொரு ரெய்டுக்கும்,பயப்படாத இயக்கம் அதிமுக.புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் அம்மா அவர்கள் எவ்வளவோ சோதனைகளை தாங்கி அதனை சாதனைகளாக மாற்றினர்.அப்படிப்பட்ட இயக்கம்தான் அதிமுக,எனவே,காவல்துறையை வைத்து அச்சுறுத்தலாம்,கட்சியை முடக்கி விடலாம் என நினைப்பது,பூனையைக் கண்மூடிவிட்டால் அது உலகம் இருண்டு விட்ட கதை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், எத்தனை சோதனை வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயார்”,என்று கூறியுள்ளார்.