#BREAKING: பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு – உச்சநீதிமன்றம் அதிரடி
அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விசாரணை அமைப்பும், மத்திய அரசும் சரியான விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதனடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது பேரறிவாளன் பிணையில் இருக்கிறார்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுவிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல் இருக்கிறது. குறிப்பாக ஆளுநர், மத்திய உளவு பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்பு, இன்னும் இதுதொடர்பாக முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என அடுக்கடுக்கான வாதத்தை பேரறிவாளன் தரப்பு முன்வைத்தது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர்ராவ் அமர்வு கூறுகையில், பேரறிவாளனை விடுவிக்க வேண்டியது தானே, பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் ஏன் அவர் சிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேரறிவாளனை ஏன் விடுவிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம் என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர். விடுதலை செய்வதற்கு யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும் என்றும் ஆளுநர், குடியரசு தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் முரணாகவே உள்ளது. ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பது கூட்டாட்சியை சிதைக்கும் என்றும் இந்த விஷயத்தில் ஆளுநரை கொண்டுவராதீர்கள் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். எனவே, பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு என்றும் குறிப்பிட்டனர். இதனிடையே, மத்திய அரசு தரப்பு கூறுகையில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநர் செயல்படும் விதம் குறித்து கூட ஜனாதிபதியே தான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72 மிக தெளிவாக கூறுவதாகவும் வாதத்தை முன்வைத்தது.