#BREAKING: தஞ்சை தேர் விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
தஞ்சையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தஞ்சையில் தேர் சப்பரம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். விமானம் மூலம் தஞ்சை சென்ற முதலமைச்சர், இறந்தவர்களின் ஒவ்வொருவரின் வீடுகளுக்கு சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவர்களது குடும்பத்தாருக்கு நிவாரண உதவி அளித்து ஆறுதலும் கூறினார்.
முதலமைச்சருடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்றம் எம்பி டிஆர் பாலு மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தையும் முதலமைச்சர் பார்வையிட இருக்கிறார். தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும், திமுக சார்பில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்ச வீதமும், காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.