#BREAKING: 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள் – முதலமைச்சர்
கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்ச அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொல்லியல் துறை சார்ந்த முக்கிய தகவலை குறித்து பேசினார். அதாவது, முதல்வரின் உரையில், சங்க கால தமிழர்கள் நன்கு முதிர்ச்சியடைந்த நகர பண்பாடு பெற்றிருந்தது கீழடி அகழாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கிமு ஆறாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருந்துள்ளது என்பது மயிலாடும்பாறை ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மயிலாடும்பாறையில் சேகரிக்கப்பட்ட இரும்பு கரிம மாதிரி அமெரிக்காவின் Beta analytical laboratory-ல் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இரும்பின் பயனை உணர தொடங்கிய பிறகுதான் வனங்களை அழித்து வேளாண்மை செய்ய தொடங்கினர். தமிழ்நாட்டில் வேளாண்மை சமூகம் தொடங்கிய காலத்திற்கான தெளிவான விடை கிடைத்துள்ளது என கூறினார்.
கீழடி அகரம் அருகே சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில் நெற்பயிர்கள் பயிர் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பிறபகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் அகழாய்வு செய்ய திட்டம் உள்ளது. கொற்கையில் ஆழ்கடல் ஆய்வின் முதற்கட்ட ஆய்வு இந்த மாதம் தொடங்குகிறது என்றும் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழகத்தில் இருந்து தான் தொடங்கியது எனவும் தெரிவித்தார்.