#BREAKING: அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு – ஈபிஎஸ் அறிவிப்பு
அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக டப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அப்போது, ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையுடன், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றும் கே.பி.முனுசாமியும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார். ஒற்றை தலைமை நாயகன் என பழனிசாமியை குறிப்பிட்டு ஜெயக்குமார் மேடையில் பேசினார். தற்காலிக அவைத்தவைராக உள்ள தமிழ்மகன் உசேனை கட்சியின் அவைத்தலைவராக தேர்வு செய்தது பொதுக்குழு. இதன்பின் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.