#BREAKING: அடுத்தடுத்து அதிர்ச்சி.. செங்கல்பட்டில் 25 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா!
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.
செங்கல்பட்டில் உள்ள சத்யசாய் மருத்துவ கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து முதலாமாண்டு வகுப்புக்கு மாணவர்கள் வந்திருந்த நிலையில், தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ள நிலையில், 25 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவ கல்லூரியில் கடந்த 3ம் தேதி 7 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதன்பின் நேற்று மேலும் 18 பேருக்கு உறுதியானதால் தற்போது 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில், மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 79ஆக இருந்த நிலையில், மேலும் 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு அனைவர்க்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அடுத்தடுத்து தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது அடுத்தடுத்து அதிர்ச்சியை அளிக்கிறது.