#BREAKING: கட்டாய மதமாற்றம் புகார் மீது கடும் நடவடிக்கை – தமிழக அரசு திட்டவட்டம்!
கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு.
கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அவரது மனுவில், தஞ்சையில் மாணவி மதமாற்றம் நடவடிக்கையால் தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்திருந்தது. இதைத்தவிர திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளில் மதமாற்றம் தொடர்பான புகார்கள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனவே, மதமாற்றத்தை பள்ளிகளில் அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு த்ரவிட வேண்டும் என்றும் அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கூறுகையில், கட்டாய மதமாற்றம் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தது. மேலும், கன்னியாகுமரி, திருப்பூரை தவிர வேறு எந்த இடத்தில் இருந்தும் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார்கள் ஏதும் வரவில்லை எனவும் கூறியதை அடுத்து, கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்ககோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.