#Breaking:”மில்லிங் செய்யாமல் சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

Default Image

சென்னை:அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளை கணக்கெடுப்பு செய்து புதிய சாலைகள் அமைக்கவும்,பணிகளை விரைவாக தொடங்கிடவும்,பணி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு சாலையின் தரம் உள்ளதா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

மேலும்,கடந்த 13.01.2022 இரவு தேனாம்பேட்டை மண்டலம்,வாரன் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அகழ்ந்தெடுக்கும் (Milling) பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனையடுத்து, மகாலிங்கம் சாலையில் தார்க்கலவையில் தாரின் சதவீதம் சரியான விகிதத்தில் உள்ளதா எனவும், சாலையில் மழைநீர் தேங்காவண்ணம் சரியான சாய்தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும்,ஆய்வு செய்தார்.மேலும், சாலை அமைக்கும் போது தாரின் வெப்பநிலை சரியான அளவிற்கு இருப்பதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையின் காரணமாக சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க 312 கிலோ மீட்டர் நீளம் கொண்ட 1,656 பேருந்து மற்றும் உட்புறச் சாலைகள் சீரமைப்புப் பணிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,முதல்வர் கூறியதாவது:

“சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து மில்லிங் செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன்.தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார்.

அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்” ,என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்