#BREAKING: காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட அரசாணைக்கு கையெழுத்து – முதலமைச்சர்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை.
பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை சென்னை அசோக் நகர் பள்ளியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மருத்துவ குழுவினர் அடங்கிய வாகனங்களையும் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மன ரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு ஊர்திகளை தொடங்கி வாய்த்த பின் இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கான அரசாணையில் நேற்று கையெழுத்திட்டுள்ளேன். எதையும் சுறுசுறுப்பாக செய்யக்கூடிய உணர்வு மாணவர்களுக்கு வர வேண்டும். நல்ல உடற்பயிற்சி, நல்ல எண்ணங்களுக்கு சுறுசுறுப்பு என்பது அடிப்படை. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டால் படிப்பு தானாக வந்துவிடும்.
எக்காரணத்தை கொண்டும் பள்ளி மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில் தான் அதிமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றன. மதியம் குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர்கள் கூறுவதற்கு மாறாக காலையில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் உணவு உட்கொள்கிறோம். நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும், நன்றாக படிக்கச் வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். பள்ளிக் கூடங்கள் மதிப்பெண் கூடங்களாக இல்லாமல் மதிப்பு உயரும் கூடங்களாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.