#BREAKING : பால்காரர் வரி கட்டும் போது நடிகர் வரி கட்ட கூடாதா….? தனுஷை விமர்சித்த நீதிபதி…!
நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள்.
நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்த வேண்டும் என்று வணிகவரித் துறை உத்தரவிட்டது. நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு, நடிகர் தனுஷ் 50 சதவீதம் வரி செலுத்தினால் மட்டுமே அவரது காரை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து, 2016-ம் ஆண்டு ஏப்ரலில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ரூ. 3.33 லட்சத்தை வரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தனுஷ் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகாத்ததால், வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நுழைவு வரியில் மீதமுள்ள தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும், நாளை அல்லது திங்கட்கிழமைக்குள் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, வரியை செலுத்த தயாராக இருப்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும், அல்லது வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு இத்தனை ஆண்டுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்போதெல்லாம் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கு பின்னும் வழக்கை முடித்துக் கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியென்றால் இந்த வழக்கை நீங்கள் இழுத்தடிப்பதற்கான நோக்கம் என்ன? என்று கூறி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும் நடிகர் தனுஷ் அவரது மனுவில் தான் எந்த பணியில் இருக்கிறார், என்ன தொழில் செய்கிறார் என்பது குறித்து குறிப்பிடவில்லை. சொகுசு காரை வாங்கும் மனுதாரரால், தான் என்ன தொழில் செய்கிறேன் என்று குறிப்பிட முடியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, அதனை ஏன் மறைந்தார் என்பது தொடர்பான ஒரு மனுவையும் தாக்கல் செய்ய கூறியுள்ளார்.
மேலும், தனுஷ் செலுத்த வேண்டிய பாக்கி என்னவென்று கணக்கிட்டு, இன்று மதியத்திற்குள் வணிக வரித்துறை தனுஷ் தரப்பிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் கணக்கீட்டு அதிகாரி ஆஜராகி எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்றுதெரிவிக்க வேண்டும் என்றும், அதை பொறுத்து இன்றைக்குள் செலுத்த வேண்டுமா? திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கப்படுமா? என்பது தொடர்பாக மதியம் 2.15 மணிக்கு தெரிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
அதேசமயம், நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். ரூ.50-க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜிஎஸ்டி வரியை காட்டுகிறார்கள். இப்படியிருக்கையில், ஒரு நடிகரால் காருக்கான நுழைவு வரியை ஏன் செலுத்த முடியவில்லை என்றும், மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து வழக்கு மதியம் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.