#Breaking:மீண்டும் அதிர்ச்சி…310 கிலோ கெட்டுப்போன சிக்கன் – அதிகாரிகள் எச்சரிக்கை!
கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில்,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த சூழலில்,தஞ்சை ஒரத்தநாடு பிரிவு சாலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே புதிதாக திறக்கப்பட்ட கிரீன் லீப் உணவகத்தில் நேற்று இரவு ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு திடீரென வாந்தி,மயக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது மாணவர்கள் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின்னர்,கிரீன் லீப் உணவகத்துக்கு சீல் வைத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில்,நாகையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில்,310 கிலோ கெட்டுபோன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் அருண் அவர்கள் பிறப்பித்த உத்தரவின்பேரில்,மாவட்டம் முழுவதும் உணவு பாதுக்கப்பு துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டதில்,வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மொத்த விற்பனை கடையில் 250 கிலோ கெட்டுபோன சிக்கன் மற்றும் அதன் கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சிக்கன் கழிவுகளை வாங்கி சிக்கன் பக்கோடா,சிக்கன் குருமா போன்றவை செய்யும் கடைகளுக்கு விற்பனைக்கு கொடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, திருக்குவளையில் உள்ள ஷவர்மா கடையிலும் 60 கிலோ காலாவதியான சிக்கன் கறிகளை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து,முதற்கட்டமாக கடை உரிமையாளர்களுக்கு இதுபோன்று இனி செய்யக்கூடாது என்று எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்வது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.எனவே,இதுபோன்ற சில கடைக்காரர்கள் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு மக்கள் உயிரோடு விளையாடுவது தடுப்பட வேண்டும்,அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பமாக உள்ளது.