#BREAKING : டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டம்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 12.06.2021 அன்று மேட்டூர் அணையினை திறந்து வைத்ததைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடியில் உயர்மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில் ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்து ஆணையிட்டுள்ளார்கள்.

இந்தக் குறுவை சாகுபடி உதவி தொகுப்புத் திட்டமானது தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் மற்றும் கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சிறப்பு கால்வாய் தூர் வாரும் பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறப்பு குறித்து, பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசித்து, டெல்டா மாவட்டங்களில் ரூ.65.11 கோடி மதிப்பீட்டில் 4.061.44 கி.மீ தூரத்திற்கு 647 தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

11.06.2021 அன்று, திருச்சி கல்லணையில் ரூ.1036 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து, பின்னர் 12.06.2021 அன்று குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். கல்லணையிலிருந்து 16.06.2021 அன்று காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் 16.06.2021 அன்றைய நிலவரப்படி 94.26 அடி (57,656 டிஎம்சி) நீர் இருப்பில் உள்ளது உச்சநீதிமன்ற உத்தரவின்படி தொடர்ந்து காவிரியில் மாதந்தோறும் உரிய அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உரிய அறிவுரை வழங்கவேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதன் அடிப்படையில், எதிர்வரும் 22.06.2021 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 3.2 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நடப்புக்குறுவைப் பருவத்தில் 3.5 இலட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் இரக விதைகள் இரசாயன உரங்கள். உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவு இருப்பில் வைத்திடவும் நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு, விரைவாக நடவுப்பணியை மேற்கொள்ளவும் வேளாண்மைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் இத்தகைய முன்னேற்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக 14.06.2021 வரை. 1,69,300 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல் நாற்றங்கால் விடும் பணியும் நடவுப்பணியும் நடைபெற்று வருகிறது.

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவைப் பருவத்தில் அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்பதற்காக, 2,870 மெட்ரிக் டன் சான்று, நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் இரசாயன உரங்கள், 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படும் இதற்காக அரசு ரூ.50 கோடி நிதியினையும், வேளாண் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கவும், நீரை திறம்பட சேமித்து பயிர்சாகுபடிக்கு பயன்படுத்தும் வகையில், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும், ரூ.11.09 கோடி நிதியினையும் வழங்கி, ஆக மொத்தம் ரூ.61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து ஆணையிட்டுள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 259 விவசாயிகள் பயனடைவார்கள்.

எனவே நடப்பாண்டில் சூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத்திட்டத்தின் காரணமாகவும் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்