#Breaking:கனமழையால் இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவிப்பு!
தமிழகம்:கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதன்காரணமாக,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை துரித்தப்படுத்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில்,தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது:
“காற்றும் கன மழையும் தொடர்ந்து இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கன மழை பெய்துள்ளது.சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் நிலைமை சீராகிவிடும்.
தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்”,என்று அறிவித்துள்ளார்.