#BREAKING: ரூ.1,600 கோடி முதலீடு – முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து!
ஐக்கிய அரபு அமீரகம் முதலீட்டாளர்கள் – முதலமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் புதிய தொழில்களை தொடங்க அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகம் – தமிழ்நாடு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கு 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நோபல் குழுமம் சார்பில் ரூ.1000 கோடி முதலீட்டில் எஃகு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத்தொடர்ந்து, முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு – துபாய் இடையே பொருளாதார உறவை மேம்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இன்று 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் – துபாய்க்குமான பிணைப்பு ஏற்கனவே உணர்வுப்பூர்வமாக உள்ளது. வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் மாநிலமான எங்களுடன் சேர்ந்து ஒன்றாக வளர்வதற்கு அழைப்புவிடுக்கிறேன். வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்.
தமிழர்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி, ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு அளித்து வருவது அனைவரும் அறிந்த உண்மை. துபாயை வெளிநாடாக நினைக்கமுடியாத அளவுக்கு தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர் என தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. எண்ணற்ற உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களை அமைத்துள்ளன. தொழில் புரிவதற்கும், முதலீடு செய்வதற்கும் தமிழகத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும் என முதலீட்டாளர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.