#BREAKING : உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி..! ஒருவருக்கு அரசு பணி..! : முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் உறுதி அளித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிதியுதவி அளித்துள்ளார்.
முதல்வர் நிதியுதவி
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், திரு. லூர்து பிரான்சிஸ், கிராம நிர்வாக அலுவலர் பணியிலிருக்கும்போது வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நமக்கெல்லாம் மிகுந்த துயரத்தினை அளித்துள்ளது.
தம் கடமையை முறையாக நிறைவேற்றி, அதன் காரணமாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழ்நாடு அரசு போற்றுகின்றது. இக்கொடிய சம்பவத்தில் உயிரிழந்த திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பாக உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒருகோடி ரூபாய் நிதியுதவி; கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி –
1/2 pic.twitter.com/ts5QkbInkq— TN DIPR (@TNDIPRNEWS) April 25, 2023