#BREAKING: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! மதுரை மாணவன் முதலிடம்!
தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 454 எம்பிபிஎஸ் இடங்களும், 104 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அக்டோபர் 20-ஆம் தேதி காலை 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான 558 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்படும்.
அக்.19, 20 ஆகிய தேதிகளில் விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. 30-ஆம் தேதி மாணவர் சேர்க்கையில் முதல் சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், முதல் சுற்று முடிவில் மருத்துவ படிப்பில் சேர தகுதி படைத்தவர்கள் நவ.4ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும். நவ.15-ஆம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்றும் அமைச்சரை அறிவித்தார். மருத்துவ படுப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் மதுரையை சேர்ந்த திரிதேவ் 705 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.