#BREAKING: தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
அக்.2 ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை அனுமதி மறுப்பு.
தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியிருந்தது. அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அவர்களது உடை அணிந்து, ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை. அக்.2-ஆம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணி நடத்த அனுமதி கோரியுள்ளதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தவும் எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளனர். திருச்சி, கடலூர், வேலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாவட்டம் ஆம்பூரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஓவல்த்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சட்டம் – ஒழுங்கு பிரச்சனை கருத்தில்கொண்டு அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை என்று காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி தர உயர்நீதிமன்றம் பரிசீலிக்க கூறிய நிலையில், சட்டம்- ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.