#BREAKING : மாணவர்களின் புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களில் கட்சி தலைவர்களின் படம் பயன்படுத்தக் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்
தலைவர்களின் படங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி படங்கள் அச்சிடப்பட்ட புத்தகப்பைகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே அச்சிடப்பட்ட புத்தகப்பைகள் மற்றும் புத்தகங்களை கிடப்பில் போடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், இனிமேல் மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் படங்கள் அச்சிடக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தல் வழங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இதுபோன்ற தலைவர்களின் படங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், இது குறித்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு நிதி தவறாக பயன்படுத்தப்பட கூடாது என்றும் தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.