#BREAKING: ஆசிரியர்களுக்கு இங்கு ஓராண்டு கட்டாய பணி – பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு
மலைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப்பகுதியில் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் மலைப்பகுதி அதிகமுள்ள 7 மாவட்டங்களில் 20 கல்வி ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் கட்டாயம் ஓராண்டு காலம் பணியாற்றிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஓராண்டு மலைப்பகுதிகளில் கட்டாய பணியாற்ற ஆணையிட்டுள்ளது. மலைப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் பயன் பெற ஏதுவாக ஆசிரியர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் தயங்குவதால் அங்கு ஓராண்டு கட்டாயம் பணி என்பது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பதவி உயர்வு பணியிடங்களில் உள்ள காலியிடங்களில் முதலில் மலைப்பகுதிக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.