#BREAKING: வட கிழக்கு பருவமழை – பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!
வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவில், திறந்தவெளியில் உள்ள கிணறுகள், இடியும் நிலையில் உள்ள சுவர்கள் ஆகிவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளி வளாகங்களில் விழும் நிலையில் மரங்களை அகற்ற வேண்டும், மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்தமுறை அதிகமான புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வட பருவ மழைக்ககாக தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். மேலும், வடகிழக்கு பருவமழையானது எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், பருவமழையொட்டி பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.