#BREAKING: மறுபிரேத பரிசோதனைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு.
மறுபிரேத பரிசோதனை விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில் 3 மருத்துவர்கள் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுக்க தலைமை நீதிபதி அமர்வில் மாணவியின் தந்தை முறையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வை இன்று நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இன்று நடைபெற உள்ள மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது. தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை உடற்கூராய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் மாணவியின் தந்தை மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் மறு கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் ஜூலியானா ஜெயந்தி, கீதாஞ்சலி மற்றும் கோகுலரமணன் மறு பிரேத பரிசோதனை செய்கின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி தடயவியல் துறை நிபுணர் சாந்தகுமார் முன்னிலையில் நடைபெற உள்ளது. மறு பிரேத பரிசோதனை நடைபெறுவதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.