#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்றும் உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 முதல் 6 வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 3-வது நாளாக இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தீவிரமாக இருப்பதால், பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்காது என தெரிவித்தனர்.

அதற்க்கு பதிலளித்த நீதிபதி, வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும், இதனை நடத்துவதற்கு ஏன் மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, தேர்தல் அட்டவணையும் தயார் நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்றும், கொரோனாவை காரணம் காட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூடாது என்ற அரசின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், கொரோனா தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்