#Breaking:இரவு நேர ஊரங்கு? – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை:ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இதற்காக,தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால்,இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தேவைப்பட்டால் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில்,ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில்,தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் தமிழகத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது,ஒமிக்ரான் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும்,ம.பி.,உ.பி மாநிலங்களைப் போன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.