BREAKING NEWS:சென்னை சேத்துப்பட்டில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் 6 பேர் கைது!4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சென்னை சேத்துப்பட்டில் கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொறியாளர்கள் மீனாட்சிநாதன், ராமகிருஷ்ணன், பாதுகாப்பு அதிகாரி மகாராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையாக இருந்து உயிரிழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் (spartank)சாலையில் வணிகவளாகம் ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதில், அமிதா சிட்டி டெவலபர்ஸ் ஜி.பி.ஏ. (GPA) எனும் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் குணச்சந்திரன் தலைமையில் பிற மாநிலத்தவர் உள்பட சுமார் 30 பேர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ரெஸ்டாரன்ட், உள்ளிட்ட பல்வேறு வணிக கடைகளுக்கான கட்டடம் கட்ட 4 தளங்களுக்கு சிஎம்டிஏ அனுமதி பெற்று கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாக அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
ஃப்ரீ ஃபேப்ரிக் எனும் கட்டுமான முறையில் பீம், பில்லர், பக்கவாட்டுச் சுவர் உள்ளிட்டவற்றை 10 முதல் 20 டன் எடையில் ஏற்கெனவே தயாரித்து அதை கிரேன் மூலம் அப்படியே பக்கவாட்டிலும் தளத்திலும் பொருத்தி வந்தனர். இன்று நடைபெற்ற பக்கவாட்டுச் சுவர் பொருத்தும் பணியின்போது, அது எதிர்பாராத விதமாக சரிந்ததில் கீழிருந்த அடுத்தடுத்த தளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 4-வது தளத்தில் பணியில் இருந்த 22 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்களான ராஜா, குணசேகர், மணிகண்டன், அருளானந்தம் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க கீழ்பாக்கம், எழும்பூரில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். சம்பவ இடத்திலேயே ராஜா மற்றும் குணசேகர் ஆகிய இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருளானந்தம், மணிகண்டன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஃப்ரீ ஃபேப்ரிக் முறை கட்டுமானம் எந்த அளவு பாதுகாப்பானது என்பதை நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்யவுள்ளதாக தீயணைப்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கட்டட விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன் ஆய்வு செய்தார். விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
கட்டிட விபத்து குறித்து கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்டவர்களிடம் விசாரிக்க இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.