#BREAKING: புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை!
புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், புத்தாண்டு அன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
வரும் 31-ஆம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். முதல்நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரையில் மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாடக்கூடாது. வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 31ம் தேதி மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள் எனவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.