#BREAKING: எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன்?
எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் இருந்துவரும் நிலையில், நத்தம் விஸ்வநாதனை நியமிக்க திட்டம் என தகவல்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பொருளாளர் பதவியும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
இந்த சமயத்தில் யார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருப்பார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நத்தம் விஸ்வநாதன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக விரைவில் அளிக்கும் என்றும் தகவல் கூறப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் இருந்துவரும் நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தற்போது நத்தம் விஸ்வநாதன் துணை பொதுச் செயலாளராக உள்ளார். இதனிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்திருந்தாலும், அதிமுக ஒருங்கிணைப்பாளராக தான் தொடர்ந்து இருந்து வருவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். மேலும், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஓபிஎஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.